காவு வாங்கப்பட்ட ‘சகாவு’





இடதுசாரி கருத்தியலை, இடது சாரி பிண்ணனியை கொண்ட திரைப்படங்கள் கூடுதலாக வெளிவருவது இந்தியாவில் கேரளத்தில் மாத்திரமே. அதற்கான சமூகக் காரணிகள் உண்டு.
மலையாள சினிமாவில் நல்ல இடதுசாரி திரைப்படங்கள் நீண்ட பாரம்பரியம் கொண்டவை. ‘நிங்கள் என்னை கம்யூனிஸ் ஆக்கி’ ‘அம்மே அறியான்’ ‘ஈ நாடு’ ‘ஆரண்யம்’ ‘லால் சலாம்’ ‘இரத்த சாட்சிகள் ஜிந்தாபாத்’, ‘சந்தேஷம்’, ‘அத்வைதம்’, ‘பாலேறி மாணிக்கம்’, ‘லெப்ட் ரைட் லெப்ட்’, என அது நீளும்.

சமீபத்தில் சித்தார்த் சிவா இயக்கத்தில் நிவின் பாலி நாயகனாய் ’சகாவு’ வெளிவந்திருக்கிறது. சகாவு என்றால் தோழர் என்று பொருள்
பாட்டு புத்தகத்திற்கு பின்னால் உள்ள கதைச் சுருக்கம் போல நான்கைந்து வரிகளில் சொல்லிவிடலாம் கதையை சமகால இடதுசாரி இயக்கத்தில் பணியாற்றும் கிருஷ்ணகுமார் என்றும் இளைஞன் கட்சியில் மேலே மேலே ‘முன்னேற’ துடிக்கிறான். அதற்காக எதையும் செய்யத்தயாராய் இருக்கும் இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மூத்த தோழருக்கு இரத்தம் கொடுக்கப்போய் ஒரே தினத்தில் வர்க்கபோதம் பெற்று உண்மையான கம்யூனிஸ்ட் ஆகிறான்.

பாட்டுப்புத்தகத்தில் ’மற்றவற்றை வெண்திரையில் காண்க’ என்று ஒரு வாசகம் இருக்கும் சகாவை பொறுத்தவரை வெண்திரையில் காணவே வேண்டியதில்லை. கேட்டால் போதுமானாது. படமுழுக்க பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். எதுவுமே நிகழவில்லை, கோஷங்கள் போடுகிறார்கள், முதலாளிகளை முறைக்கிறார்கள், ஆளற்ற மலைச்சாலைகளில் செங்கொடியோடு ஊர்வலம் போகிறார்கள். மாண்டேஜ்களில் முதலாளிகளிடம் ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கி வெற்றி பெற்றதாய் அறிவிக்கிறார்கள். சகாவு கிருஷ்ணகுமாரை தூக்கிக் கொண்டு சக சகாவுகள் ஓடுகிறார்கள்.

சமகாலம், கடந்தகாலம் என இரண்டு காலங்களில் பயணிக்கிறது கதை. கதைதான் திரைப்படம் என்று உறுதியாய் சொல்லவே முடியாது. இரண்டு காலங்களிலும் பிழையாகவே பயணிக்கிறது.
சமகால கேரள சிபிஎம் கடும் நெருக்கடியில் இருக்கிறது. குண்டாயிசம், பிஜேபி, உடனான மோதல் முதலமைச்சர் பினராய் விஜயன் மீது சிபிஐ வழக்கு என்பது சமகாலம். கடந்த காலம் எனும்போது தேவிகுளம், பீர்மேடு, போன்றவற்றை உள்ளடக்கிய இடிக்கி மாவட்டத்தில் நடக்கும் இந்தக் கதையில் ஒரு தமிழர் கூட இல்லை. ஒரேயொரு மீசை மழித்த மலையாளியை தமிழராக்கி அவர் ‘அதெங்கன்ன செய்யும்’ என ’மலையாளத்தமிழில்’ பேசி அவரை தமிழர்ரென நம்மை நம்பச்செய்கிறார்கள்.

மூணாறை உள்ளடக்கிய பழைய இடுக்கி மாவட்டம் முழுக்க முழுக்க தமிழர்களின் இரத்தத்தால் உருவாக்கப்பட்டது. புகழ்பெற்ற மலையாள நாவலாசிரியர் எஸ்கே பொற்றக்காடின் நாவலே அதற்கு சாட்சி. வரலாற்றை அப்படியே திரிக்கிறார்கள். ஏற்கனவே ’அயூபிண்டே புஸ்தகம்’ என்ற மலையாளத் திரைப்படம் இதே தவறை செய்தது.
மலையாள சினிமாவில் நல்ல இடதுசாரி சினிமாக்கள் போற்றி போற்றி வகைப் படங்களாக பெரும்பாலும் இருந்ததில்லை. இடதுசாரிக்கட்சியின் சிக்கல்களை, நடைமுறைக்கும் சித்தாந்ததங்களுக்கும் உள்ள இடைவெளிகளை, வறட்டுத்தனங்களை, போலித்தனங்களை கூர்மையான  பகடியோடு சித்தரிக்கும் ’சந்தேஷம்’, ‘பாலேறி மாணிக்கம்’ போன்ற திரைப்படங்கள் இதற்கு  ஆகச்சிறந்த உதாரணங்கள்.

சமீபத்தில் போற்றி போற்றி வகைப்படங்கள் சற்று கூடியிருப்பதாக தோன்றுகிறது. ஒரு மாதத்துக்கு முன்னால் இதே வகைமையில் வெளி வந்த மற்றொரு மலையாள திரைப்படமான ’ஒரு மெக்ஸிகன் அப்ரதா’ வையும் இதே தன்மையோடே இருக்கிறது. குற்றம் குறையின்றி மாசுமருவற்று புனிதமாக இடதுசாரி இயங்கங்களை சித்தரிக்கிறது. ஏற்கனவே அங்குள்ள நல்ல இடதுசாரி சினிமாக்கள் அதன் குற்றம் குறையோடு அப்பட்டமாய் முன்வைத்ததனாலேயே இன்றைக்கும் அது கொண்டாடப்படுகின்றன.  ‘சந்தேஷம்’ என்ற திரைப்படத்தின் பெயரை சொன்னவுடனேயே சிரிக்காத மலையாளிகள் மிகக் குறைவு. ‘பாலேறி மாணிக்கம்’ என்றென்றைக்கும் அவர்களுடைய விவாதங்களில் உயிர்ப்போடு இருக்கிறது.

மெக்ஸிகன் அப்ரதாவுக்கும், சகாவுக்கும் என்ன இடம். சகாவு திரைப்படத்தில் படம் முழுக்க செங்கொடி ஏந்தியபடி இன்குலாப் ஜிந்தாபாத் இன்குலாப் ஜிந்தாபாத் என கோஷம் போட்டு செல்லும் அம்பது அறுபது அக்குள்களை காண்கிறோம். அக்குள்கள் அக்குள்கள்தான் அதற்கு மேல் என்ன சொல்ல.

 மே -2017 தமிழ் இந்துவில் வெளிவந்த கட்டுரையின் முழுமையான வடிவம்

Comments